ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்

276


ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் சிவபெருமானுக்கு தினசரி வெந்நீர் அபிஷேகம் நிகழும் அதிசயம்.


பொன்மலை நாதர் கோவில் இதன் மற்றொரு பெயர் கனக கிரீஸ்வரர் கோவில். கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ பேரரசால் கட்டப்பட்டது அதற்கு பின் 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் விரிவாக்கப்பட்டது.


இந்த கோவில், தமிழகத்தில் திருவண்ணாமலையிலிருந்து 50 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. அமைந்துள்ள பகுதியின் பெயர் தேவிகாபுரம். இந்த கோவில் அமைந்துள்ள மலையின் பெயர் கனகாச்சலம் அல்லது பொன்மலை.
இங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தி என போற்றப்படுகிறார்.

இந்த கோவில் குறித்து சொல்லப்படும் வரலாறு யாதெனில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்து வந்தவர் இருளா எனும் வேட்டைகாரர்.
வேர்களை பறிப்பதற்காக கோடாரியின் உதவியுடன் பூமியை தோண்டுகையில் அவருடைய கோடாரி பூமியின் அடியில் சுயம்புவாக இருந்த சிவ லிங்கத்தின் மீது பட்டு அந்த சிவலிங்கத்திற்கு காயம் ஏற்பட்டது.


சிவபெருமானுக்கு காயத்தை ஏற்படுத்தி விட்டோம், நாம் செய்தது மிகப்பெரும் தவறு என்பதை அந்த வேடவன் உணர்ந்த போது, அவருக்கு நினைவு தவறியிருந்தது .அதன் பின் அவருடைய கனவில் தோன்றிய சிவபெருமான் தான் இங்கே சுயம்புவாக எழுந்தருளியிருந்ததாக விளக்கி கூற அந்த சிவலிங்கத்தை மலையின் உச்சியில் வைத்து வழிபட்டு வந்தார் அந்த வேடவர்.

சிவலிங்கத்தின் மீது காயம் ஏற்பட்டிருந்ததால் அவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து வந்தார் வேடவர்.. இந்த வழக்கம் இன்றுவரையும் இந்த கோவிலில் தொடர்ந்து வருகிறது. இந்த கதை அந்த பகுதியில் சொல்லப்படும் ஒன்றாகவே உள்ளது. ஆயிரமாண்டு பழமை வாய்ந்த கோவில் என்பதால் இதன் தோற்றம் குறித்த முழுமையான தகவல்கள் இல்லை.


இந்த கருவறையில் இரண்டு சிவலிங்கம் இருப்பதை காணலாம். ஒரு முறை பல்லவ மன்னன் இந்த கோவிலை கடந்து போருக்கு சென்ற போது, தான் போரில் வெற்றி பெற்றால் இந்த சிவலிங்கத்திற்கு கோவில் கட்டுவதாக நினைத்து வழிபட்டாராம். அதன்படியே அவர் வெற்றி பெற்றதும், காசியிலிருந்து வரவழைக்கப்பட்ட சிவலிங்கத்தை இங்கே நிர்மாணித்து வழிபட்டதாகவும் ஒரு செவிவழி வரலாறு உண்டு.

இந்த கோவிலை சென்றடைய ஒருவர் 365 படிகட்டுகள் ஏறி செல்ல வேண்டும். இது வருடத்தின் நாட்களை குறிப்பதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here