இன்று ஸ்ரீ ராமநவமி

238பட்டாபிஷேகத்தில் மக்களும், முனிவர்களும், பெரியோர்களும் வாழ்த்த.. மங்கல கீதங்கள் மகிழ்ச்சியாக ஒலிக்க.. வேதங்கள் முழங்க.. இராமனும் சீதாதேவியும் அரியணையில் அமர்ந்தார்கள். ஸ்ரீ ராமரின் சகோதரர்கள் வெண்சாமரம் வீசுவதும், வெண்கொற்றக் குடைபிடிப்பதும்,உடை வாள் ஏந்துவதுமாக பணிகள் செய்ய ஸ்ரீராமரின் பாதத்தில் ஆஞ்சநேயர் அமர்ந்திருந்தார்.

ஸ்ரீராமரின் பார்வை அனுமனை நோக்கியது. உன் பக்தியை அளவிட முடியாது. எனக்கு உதவி செய்வதில் உனக்கு இணையாக யாரும் கிடையாது. நான் உனக்கு என்ன செய்ய போகிறேன் மாருதி.. உன் பக்திக்கு இணையாக விலை மதிப்புள்ள பொருள்களோ, பதவியோ இருப்பதாக நான் அறியேன்.

உன் உடல், மனம் அனைத்தையும் எனக்காகவே அர்ப்பணித்துவிட்டாய். அதற்கு ஈடாக உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் என் அன்பு தவிர வேறு எதுவும் இல்லை என்று கண்ணீர் துளிகள் சிந்த அனுமனை கட்டியணைத்தார். அனுமனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இல்லை

சுவாமி உங்கள் அன்பை பெறும் அளவுக்கு நான் பொருத்தமானவனாக இருப்பதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதை விட பெரிய பேறு வேறு என்ன இருக்கிறது. பெறுவதற்கு அரிய பேறாகிய உங்கள் அன்பை பெற நான் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று பக்தி பரவசத்தில் கூறினார்.

ஸ்ரீ ராமனுக்கும், அனுமனுக்கும் நடந்த உரையாடலை பக்கத்தில் இருந்த சீதாதேவி கேட்டாள். இருவருக்கும் இடையிலான பக்தியைப் பற்றி சீதா தேவி அறிவாள். தான் அனுமனுக்கு ஏதேனும் தர வேண்டுமே என்று நினைத்து விலை மதிப்பில்லா ஒளிவீசும் முத்துமாலையை, இது என்னுடைய பரிசு.. நீ வைத்துக்கொள் என்று கொடுத்தாள்.

எல்லையில்லா ஆனந்தத்துடன் வாங்கிய அனுமன் அடுத்து செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விலை மதிப்பில்லா முத்து மாலையிலிருந்து ஒவ்வொன்றையும் கடித்து உடைத்து பார்த்துகொண்டிருந்தார் .(குரங்கு கையில் பூமாலை என் று சொல்கிறோமே பொருள் புரிகிறதா) சீதா தேவிக்கு சங்கடமாகிவிட்டது. என்னாயிற்று அனுமன். விலை மதிப்பில்லா முத்துக்களை உடைக்கிறாயே என்றாள். சுற்றியிருந்தவர்கள் அனுமனை வசை பாடினர். அனுமனுக்கு ஏதோ ஆயிற்று… அவனை விரட்டுங்கள் என்றெல்லாம் பேசினார்கள்.

ஸ்ரீ ராமனுக்கு தெரியாததா… சிறிது நேரம் கழித்து என்னாயிற்று மாருதி என்றார். எப்பொருளிலும் உங்களை மட்டுமே காணும் எனக்கு முத்து மணியிலும் உங்களைக் காண ஆவலாயிற்று.. அதான் ஒவ்வொன்றாக உடைத்துப் பார்த்தேன். ஆனால் உங்களின் உருவம் அதில் தென்படவில்லை.

நீங்கள் இல்லாத ஒன்று என்னிடம் எதற்கு இருக்க வேண்டும் அதான் அனைத்தையும் உடைத்துவிட்டேன் என்றார். சுற்றியிருந்தவர்கள் எக்களித்தார்கள். மாட்டிக்கொண்டதும் தப்பிக்க அனுமன் சூழ்ச்சி செய்கிறான் என்றனர்.

நீ எப்போதும் என்னை நினைப்பது இருக்கட்டும். இத்தருணம் நான் உன்னுள் அடங்கியிருக்கேனா? அப்படியானால் அதை இப்போது காட்ட முடியுமா என்றார். ஆகட்டும் சுவாமி என்ற ஆஞ்சநேயர் சுற்றியிருந்தவர்களின் கொக்கரிப்பை அலட்சியம் செய்தவாறு நெஞ்சை பிளந்தார்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here