கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?

402

துவார பாலகர்கள் !

கோயில்கள் அமைக்கப்பட்ட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. திருக்கோயிலின் அமைப்பு லட்சணங்களாக கர்ப்ப கிரஹம், துவஜஸ்தம்பம், பலிபீடம், ராஜகோபுரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்களாக துவார பாலகர்களையும் நிர்மாணிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது. சில்ப சங்கிரஹம் என்னும் நூல் துவாரபாலகர்களின் தோற்றத்தையும் அங்க லட்சணங்களையும் அழகாக எடுத்துச் சொல்கிறது. நீண்ட பெரிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை என்று அந்த நூலில் வர்ணிக்கப்பட்டபோதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவாரபாலகர்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம்.


ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த மாறுதலுக்குக் காரணம் விளங்கும்.

பெருமாள் கோயில் துவார பாலகர்கள்: விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர். இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.

ஜீவாத்மாவின் வைகுன்டத்தை நோக்கிய ப்ரயாணத்தில் மூன்று நிலைகள் முக்கியமாகப்பேசப்படுகின்றன. அவையாவன: சாமீப்யம், சாரூப்யம், சாயுஜ்யம் என்பனவாம்.

- Advertisement -


சாமீப்யம் என்பது வைகுண்டத்தில் இறைவனின் அருகாமையில் இருப்பது. அவனை அனுபவிப்பது. அவனால் கடாக்ஷிக்கப்படுவது.
சாரூப்யம் என்பது இறைவனையே எப்போதும் சிந்தித்திருப்பது.

பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை….. என்று ஆழ்வார் பாடியது இதனைத்தான்.


அவனையே சிந்தித்திருப்பதால் அவனது திருமேனியை பலவாறும் ஒத்திருக்கும் மேனியை ஆத்துமாவும் அடைகிறான். துவார பாலகர்கள் (வாயிற் காப்போன்கள்) எப்போதும், உறங்கிடாமல், இறைவனையே சிந்தித்திருப்பதால் இறைவனின் ரூபத்தின் பல அம்சங்களை பெறுகிறார்கள். எனவே திருமால் கோயில்களில் நாம் காணும் வாயிற்காப்போன்கள் சாரூப்ய நிலையை அடைந்தவர்கள். அவர்கள் காண்பதற்குத்திருமாலைஒத்திருக்கிறார்கள்.
சாயுஜ்யமென்பது ஒன்றிய நிலை.

இனி பெருமாள் கோயிலுக்குச்செல்லும்போதெல்லாம் வாயிற்காப்போன்களை இறைவனல்லாது வேறொன்றையும் சிந்தியாது இறைவனின் சொரூபத்தை அடைந்த நித்யசூரிகள் என்று புரிந்துகொண்டு வழிபடலாம்.

- Advertisement -