திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி விழா

474

தினமும் 10 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதி*

தூத்துக்குடி :

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது.

அதன்படி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் 6-ம் திருநாளான 20-ந் தேதி அன்று சூரசம்ஹார நிகழ்ச்சியும், 7-ம் திருநாளான 21-ந் தேதி அன்று திருக்கல்யாண நிகழ்ச்சியும் மிக முக்கிய நிகழ்வுகள் ஆகும். சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சார்ந்த பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள கடற்கரையில் நடைபெறும். இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் பிரகாரத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். அதேபோன்று 21-ந் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 12 தினங்கள் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் பிரகாரத்துக்குள் நடைபெறும்.

கந்த சஷ்டி திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் பகுதியில் இரவில் தங்குவார்கள். மேலும் இங்குள்ள விடுதிகளிலும் ஒரு வார காலத்துக்கு விடுதிகளை பதிவு செய்தும், மடங்களிலும் தங்குவார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கோவிலுக்குள் மற்றும் கோவில் வளாக பகுதியில் தங்க அனுமதி இல்லை. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை. கடற்கரை பகுதிக்கு செல்லவும் யாருக்கும் அனுமதி இல்லை.

மேலும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களை தவிர மற்ற நாட்களில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதில் 50 சதவீதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களையும், 50 சதவீதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். கோவில் நிர்வாகத்தின் மூலம் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சமுக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். பல்வேறு தற்காலிக கொட்டகைகளை ஏற்படுத்தி கூடுதலாக வரும் பக்தர்களை சமுக இடைவெளியுடன் அமர வைத்து சுவாமி தரிசனத்துக்கு அனுப்ப வேண்டும். பக்தர்கள் கோவில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சணம் செய்திடவோ அனுமதி இல்லை. கட்டணம் அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் கோவில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர் வீதி உலா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தனியார் அமைப்புகளுக்கு அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. கோவில் மூலமாக அன்னதானம் பார்சல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும். மேற்கண்ட ஏற்பாடுகளுடன் கொரோனா பாதுகாப்பை பின்பற்றி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here