தை அமாவாசை தர்ப்பணம்

303தை மாதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுவது தை அமாவாசை. வான் மண்டத்தில் இருக்கும் சூரியன் ஜோதிட கணக்கின் படி மகரத்தில் உச்சம் பெரும் மாதம் இந்த தை மாதம். அதனால் இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றது.

அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கான நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நம் நன்றியை செலுத்த உகந்த நாட்கள் என கருதப்படும் மூன்று முக்கிய நாட்களில் (மகாளய, தை மற்றும் ஆடி) தை அமாவாசை ஒன்றாகும்.

தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

அதன்படி இந்த ஆண்டு தை 29ம் தேதி அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி தை அமாவாசை தினமாகும். அந்நாளில் தர்ப்பணம் கொடுப்பது எப்படி? தர்ப்பணம் கொடுக்கும்போது செய்யக்கூடாதவை என்னென்ன? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் எவ்வாறு கொடுப்பது?

நம்முடைய முன்னோர்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்களை வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அதுவும் காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அதேபோல் மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.

ஆனால் ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது.

தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.

இந்த தவறை செய்து விடாதீர்கள்…!

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தர்ப்பணம் கொடுக்கும்போது எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.

மேலும் தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.

அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

காகத்துக்கு முக்கியத்துவம் :

தை அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.

காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

துளசி மாலை :

முன்னோர்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது விசேஷம்.

எனவே தை அமாவாசையன்று வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்திற்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். நமக்கு விஷ்ணு மற்றும் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here