முருடேஸ்வரர் சிவன் ஆலயம் பற்றிய தகவல்

306

முருடேஸ்வரர் சிவன் !ஓம் சிவாயநம

முருடேஸ்வரர் சிவன் கோவில், கர்நாடகாவில் உள்ள முருடேஸ்வர் கடற்கரை நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சிவன் கோவில். இங்கு தான் உலகிலேயே மிகவும் பெரிய சிவன் சிலை உள்ளது.

பஞ்சக்ஷேத்திரங்களில் ஒன்றான, முருடேஸ்வர் கோவில் சரித்திரம், முக்கியத்துவம் மற்றும் தரிசனம்

முருடேஸ்வர்

கர்நாடகா மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு ஆன்மிக அற்புதம் இந்த சிவாலயம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கட்டிப்போடும் ஓர் ஆலயம். ஆன்மிகத்தையும் இயற்கையையும் ஒரு சேர கண்டு கழிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

மங்களூர்

சென்னையிலிருந்தது இங்கு நேரடி ரயில் சேவை கிடையாது. மங்களூர் வரை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸில் சென்று அங்கிருந்து முருடேஸ்வர ரயில் நிலையத்திற்கு பாசஞ்சர் ரயில்களில் செல்லலாம். தினசரி காலை 5.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மட்கோவன் பாசஞ்சர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரசுக்கு சிறந்த இணைப்பு ரயில். வழிநெடுக இயற்கை காட்சிகள் கண்ணைப் பறிக்கும். குகைகள் வழியாக ரயில்கள் செல்வது குழந்தைகளை குதூகலப்படுத்தும். இந்தியாவின் மிக அழகான ரயில் பாதை இது. மங்களூரு மும்பை கொங்கன் ரயில்வே தடத்தில் பகல் நேரத்தில் இயற்கையை ரசித்துக்கொண்டே பயணிப்பது ஓர் அற்புதமான அனுபவம்.

வழியெல்லாம் பச்சை பசுமை, கடல், நதி, மலை, மழை… நிஜமாவே கொங்கன் ரயில்வேயில் பகல் நேர ரயில் பயணங்கள் அதிலும் மழைக்கால பயணங்கள், நம் ஆன்மாவை முழுசா சுத்திகரித்துவிடும். அனுபவிச்சு பார்த்தா தான் அந்த சுகம் புரியும். எத்தனை பெரிய கவலை இருந்தாலும் மறந்து மனசு லேசாயிரும்.

ரயில் மீது லாரிகள்

இந்தியாவில் வேறுஎங்கும் காணமுடியாத ரோல் ஆன் ரோல் ஆப் என்ற ரயில் சர்விசை இங்கு மட்டுமே பார்க்க முடியும். ரயில்கள் மீது சரக்குடன் கூடிய லாரிகள் வரிசையாக செல்கின்றன. இந்த பகுதியில் செல்லும் சாலைகள் மிக கடினமானது. ஏகப்பட்ட வளைவுகள் கொண்ட அபாயகரமான சாலை. மலைகள் வழியாக செல்வதால் அந்த சாலைகளால் லாரிகள் நிறைய சேதங்கள் அடைகின்றன. விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. அதனை தவிர்ப்பதற்காகவே ரயில்கள் மீது லாரிகள் ஏற்றி செல்லப்படுகின்றன. நமக்கு இதுவொரு வித்தியாசமான அனுபவம்.

சரி, இப்போது கோயிலுக்கு செல்வோம். முருதேஸ்வர் ரயில் நிலையத்திலிருந்து முருடேஸ்வரர் கோயில் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆட்டோக்கள் செல்கின்றன. ரூ.50 கட்டணமாக தரவேண்டியிருக்கும். இங்கு ஆட்டோ கட்டணங்கள் நியாயமாகவே இருக்கின்றன.

அரபிக் கடல்

மூன்று பக்கமும் அரபிக் கடல் சூழ்ந்து இருக்கும் கண்டூக மலை மீது இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இந்த ஊரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்தக் கோயிலின் கோபுரமும் சிவனின் பிரமாண்டமான சிலையும் தெரிகிறது.

ஆட்டோவில் சென்று இறங்கிய உடனே நம்மிடம் ரூம் வேண்டுமா என்று கேட்டு வருபவர்கள்தான் அதிகம். அந்தளவிற்கு இங்கு தங்கும் விடுதிகள் இருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தாராளமாக இங்கு அறையெடுத்து தங்கலாம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.750-ல் இருந்து அறைகள் இருக்கின்றன.

சிவன் கோயில்

முருடேஸ்வர் கடற்கரை சிறிய அலைகளை கொண்ட கடற்கரையாக இருக்கிறது. அதனால் இங்கு நீராடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஒருபக்கம் மக்கள் நீராடினாலும் கோயிலின் மறுபக்க கரையோரம் மீன்பிடி படகுகள் நிற்கின்றன. கோயிலுக்கு முன்பே மீன் மார்க்கட் இருக்கிறது. ஒரு சிவன் கோயில் அருகே இப்படிப்பட்ட காட்சிகள் காண்பது அரிதான ஒன்றுதான். ஆனாலும் நாங்கள் சென்ற மழைக்காலத்தில் கூட மீன் வாடை அடிக்காமல் இருந்தது ஆச்சரியமான விஷயம்.

கோயிலின் நுழைவாயிலைக் கடந்ததும் மிகப் பெரிய கோபுரம் இருக்கிறது. உலகிலேயே இரண்டாவது உயரமான கோபுரம் இது. 20 மாடி உயரம் கொண்டது. கோபுர வாசலின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு யானை சிலைகள் நம்மை வரவேற்கின்றன. அதற்குள் நுழைந்தால் கோபுரத்தின் மேல் பகுதிக்கு செல்ல இரண்டு லிப்டுகள் இருக்கின்றன. ஒரு நபருக்கு ரூ.10 கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.

நாங்கள் சென்ற நேரத்தில் கடல் மிகுந்த கொந்தளிப்பில் இருந்தது. கடலின் இயல்பான நீலநிறம் கருநிறமாக மாறியிருந்தது. காற்றும் மழையும் ஆக்ரோஷத்துடன் இருந்தது. இவற்றையும் மீறி அந்த அமைவிடம் நம்மை வசீகரித்தது.

கோபுரத்தின் மேலிருந்து பார்க்கும்போது பிரமாண்டமான சிவன் சிலையும் அதன் பின்புலத்தில் ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலும் பேரழகு. சிலையின் முன் அமைந்திருக்கும் நந்தி, பசுமை போர்த்திய புல்வெளி என்று எல்லாமே கண்களை விட்டு அகலாத காட்சிகள். கோபுரத்தின் முன் பகுதியில் பார்த்தால் முருடேஸ்வர் நகரின் அழகு, தென்னை மரங்கள் மற்றொரு உலகை நமக்கு காட்டுகின்றன. கோபுரத்தின் இரு பக்கங்களிலும் அரபிக் கடலும் அதன் கரையோரத்தில் வளர்ந்திருக்கும் பசுமை மரங்களும் அழகுக்கு அழகு சேர்கின்றன. இந்த கோபுரத்தின் மேல் தளம் நமக்கு மற்றொரு உலகத்தை காட்டுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதையெல்லாம் பார்த்து சொக்கிப்போவது நிச்சயம்.

உயரமான கோபுரம்

இந்தக் கோபுரம் 238 அடிகள் உயரம் கொண்ட ராஜகோபுரம். 2008-ம் ஆண்டு தான் இது ஆர்.என்.ஷெட்டி டிரஸ்ட் மூலம் கட்டி முடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இது உலகின் இரண்டாவது உயரமான கோபுரமாக திகழ்கிறது. அதேபோல் இங்கிருந்த சிதிலமடைந்த கோயிலை 1977-ம் ஆண்டு புதுப்பித்தார்கள். அதே ஆண்டில் கோயிலுக்கு அருகில் 5 கோடி ரூபாய் செலவில் 123 அடிகள் உயரம் கொண்ட பிரமாண்ட சிவன் சிலையை அமைத்தார்கள். இந்த சிலைதான் உலகிலேயே சிவன் சிலைகளில் இரண்டாவது உயரமான சிலையாகும். முதல் சிவன் சிலை நேபாள நாட்டில் இருக்கிறது. தமிழக சிற்பிகள் இந்த சிலையை இரண்டு வருடங்களில் உருவாக்கினார்கள் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம்.

சூரிய ஒளி நேரடியாக சிலை மீது விழும் படி அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிலை மீது தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. சூரிய கதிர்கள் சிலை மீது படும்போது உண்மையிலேயே தங்கம் போல் தகதகவென கண்ணைப் பறிக்கும் ஒளியில் ஜொலித்துக்கொண்டிருந்தது. காலப்போக்கில் கடலில் இருந்து வீசிய பலத்த கடல் காற்று மற்றும் தொடர் மழையால் தங்க முலாம் பொலிவிழந்து, அழிந்து போயிற்று. அதன் பிறகுதான் இந்த நிறம் பூசப்பட்டது. பல புயல்களை சந்தித்தும் சிலை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

ஆத்ம லிங்கம்

முருதேஸ்வர் கோயில் பார்ப்பதற்கு நவீன கட்டடக்கலையில் கட்டப்பட்டதாக தெரிந்தாலும், இதன் வரலாறு இராமாயண காலத்திலிருந்தே தொடங்குகிறது. ராவணன் ஒரு அரக்கனாக நமது கண்களுக்கு தெரிந்தாலும் அவனொரு சிறந்த பக்திமான். சிவனின் தீவிர பக்தன். அவனுக்கு சிவனிடம் இருக்கும் ஆத்மலிங்கத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் நெடுநாளாக இருந்தது. அதற்காக சிவனை நோக்கி தவம் இருந்தான்.

ஆத்மலிங்கம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. அழியா வரம் தரக்கூடியது. அது ஒருவனிடம் இருந்தால் அவன் இந்த உலகையே தனது காலடியில் கொண்டு வந்துவிடலாம். அந்த ஆசையில்தான் ராவணனும் தவமிருந்தான். வழக்கம் போல் பக்தனின் பக்தியை மெச்சிய சிவன் ராவணனுக்கு ஆத்மலிங்கத்தை கொடுத்தார். ஒரேயொரு கண்டிஷன் மட்டும் போட்டார். ‘நீ உனது இடத்திற்கு சென்று சேரும் வரை இந்த ஆத்மலிங்கத்தை தரையில் வைக்கக்கூடாது’ என்று. ராவணனும் இதற்கு ஒத்துக்கொண்டான்.

விநாயகர்

இந்த விஷயம் நாரதருக்கு தெரியவந்தது. சும்மா இருப்பாரா..? இராவணன் தனது இடத்திற்கு ஆத்மலிங்கத்தை சென்று சேர்த்துவிட்டால் உலகில் யாரும் அவனை வெல்ல முடியாதே இதை தடுத்தே ஆகவேண்டும் என்ற அச்சம் நாரதருக்கு வந்தது. உடனே விநாயகரிடம் சென்று முறையிட்டார். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றார். விநாயகர் ஒரு பிராமண சிறுவனாக மாறி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

இராவணன் தினமும் மாலையில் தவறாமல் பிரார்த்தனை செய்யும் வழக்கம் கொண்டவன். இராவணன் கோகர்ண அருகே வரும் போது விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தின் சக்தியால் சூரிய ஒளியை மறைத்தார். இராவணன் மாலை நேரம் நெருங்கி விட்டது என்ற எண்ணத்தில் பிரார்த்தனை செய்ய முயல்கிறான். ஆத்மலிங்கத்தை தரையில் வைக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்வது என்று நினைக்கும் போது சற்று தொலைவில் பிராமண சிறுவன் வேடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் விநாயகரை இராவணன் அழைக்கிறான்.

தனது பூஜை முடித்து வரும் வரை இந்த லிங்கத்தை தரையில் வைக்காமல் கையிலேயே வைத்திருக்கும்படி சொல்கிறான். விநாயகரும் சரி என்கிறார். ஆனால், மூன்று முறை அழைப்பதற்குள் வந்துவிட வேண்டும் என்று விநாயகர் கேட்டுக்கொண்டார். ராவணனும் ஒத்துக்கொண்டான். விநாயகர் வேகவேகமாக ராவணனை மூன்று முறை அழைத்துவிட்டு ஆத்மலிங்கத்தை தரையில் வைத்துவிட்டார்.

வேகமாக ஓடிவந்து பார்த்த இராவணன் அதிச்சியடைந்து போனான். அதற்குள் விஷ்ணுவும் தனது மாயையை விலக்கிக்கொண்டார். பகல் வந்தது. தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த கடும் கோபம் கொண்டான். வினாயகர் லிங்கத்தை கோகர்ணத்தில் வைத்து விட்டதால், அது அங்கு நிலைத்து விட்டது. ராவணன் தனது பலத்தால் எடுக்கப் பார்த்தான். பூமியிலிருந்து இழுக்கப் பார்த்தான். லிங்கம் அசையவில்லை.

அகோர உருவத்தில்

லிங்கத்தை சுற்றியிருந்த துணி 32 கிமீ தொலைவில் கடற்கரையில் இருக்கும் கண்டுக மலையில் விழுந்தது. அதனால்தான் இங்கு சிவன் முருடேஸ்வர் என்ற அகோர உருவத்தில் இருக்கிறார். இந்த நிகழ்வை விளக்கும் அழகிய சுதை சிற்பங்களைக் கோயிலின் மேற்பகுதியில் காணலாம். சிலையின் கீழுள்ள குகையில் இதை ஒரு கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள். அதற்கு கட்டணம் ரூ.10. மற்றபடி மிக சுத்தமாக பராமரிக்கப்படும் இவ்வளவு பெரிய கோயிலில் எங்குமே கட்டணம் ஏதும் இல்லை. இதே கோயில் நமது தமிழ் நாட்டில் இருந்திருந்தால் ஒரு 150 ரூபாய் வருவதுபோல டிக்கெட் வைத்திருப்பார்கள். கோவிலில் அன்னதானம் தினமும் நடக்கிறது. பலவித சேவைகளும் நடக்கின்றன. இங்கு மகாசிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஆன்மிகம் மட்டுமல்ல. இங்கு அட்வெஞ்சரும் உண்டு. நீர் விளையாட்டுகள் என்று அழைக்கப்படுகிற வாட்டர் ஸ்போர்ட்ஸ் இங்கு விளையாடப்படுகிறது. ஸ்பீட் போட்டிங், டால்பின் போட்டிங், ஸ்குபா டைவிங் என்று ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. இது இளைஞர்களை பெரிதாக கவர்கிறது. இதமான சூழல் நிலவினால் மட்டுமே இந்த சாகச நீர் விளையாட்டுகள் நடத்த அனுமதிக்கப்படுகின்றன.

வானிலை

அக்டோபர் முதல் மே மாதம் வரை சீசன் காலம். இதமான பகல் நேர குளிர், கோடை காலத்தில் தாங்கக்கூடிய வெப்பம் என்று சாதகமான வானிலையே நிலவுகிறது. ஸ்குபா டைவிங் செல்ல விரும்புபவர்கள் நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில் இங்கு செல்வது நல்லது. கடும் மழை, கடல் கொந்தளிப்பு இருந்தால் நீர் விளையாட்டுகள் எதுவும் இங்கு நடை பெறாது. சுற்றுலா பயணிகள் அதற்கேற்ப பயண திட்டத்தை வகுத்துக்கொள்வது நல்லது.

எப்படி செல்வது?

சென்னையிலிருந்து கோயம்பத்தூர் பாலக்காடு வழியாக மங்களூருக்கு ரயிலில் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ முருடேஸ்வர ரயில் நிலையத்திற்கு செல்லலாம். பேருந்தில் செல்வதென்றால் சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக முருடேஸ்வருக்கு சொகுசு பேருந்துகள் உள்ளன. அதன் மூலமும் செல்லலாம். அருகிலிருக்கும் விமான நிலையம் மங்களூரு. சென்னையிலிருந்து மங்களூருக்கு நேரடி விமான சேவை இல்லை. அதனால், பெங்களூர் சென்று மாறி செல்ல வேண்டும்.

இங்கு தங்குவதற்கு தகுதிக்கேற்ப பலவித கட்டணங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன.

முருடேஸ்வர பயணம் ஓர் அற்புதமான அனுபவத்தை தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பஞ்சக்ஷேத்திரங்களில் ஒன்றான, முருடேஸ்வர் கோவில் சரித்திரம், முக்கியத்துவம் மற்றும் தரிசனம்!

முருடேஸ்வர்: முருடேஸ்வர் கோவில் பழமையானது, மூன்று பக்கம் கடல் சூழ்ந்த கந்துக மலையின் மீதுள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், புதுப்பிக்கப்பட்டது. 1977ம் ஆண்டு தமிழகத்திலிருந்து சிற்பிகள், முதக்லியோர் வரவழைக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப் பாட்டது. கோவிலுக்கு அருகில் ரூ.5 கோடி செலவில், 123 அடிகள் / 37 மீட்டர்கள் உயரம் சிவன் சிலை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது

பஞ்சக்ஷேத்திரங்கள் அல்லது ஐந்து லிங்கங்கள் உருவான கதை[4]: கோகர்ண கதை இங்கும் விவரிக்கப் படுகிறது. முன்னரே சொல்லியபடி, வினாயகர் லிங்கத்தை கோகர்ணத்தில் வைத்து விட்டதால், அது அங்கு நிலைத்து விட்டது[5].

கோபம் கொண்ட ராவணன் அதனை தனது பலத்தால் எடுக்கப் பார்த்தான். பூமியிலிருந்து இழுக்கப் பார்த்தான். அப்பொழுது அது பசுவின் காது போன்ற உருவத்தை அடைந்தது (கோகர்ண).

கோபத்தில் ராவணன் லிங்கம் வைத்திருந்த பெட்டியை எரிந்தபோது, அது 23 மைல்கள் தொலைவில் உள்ள சஜ்ஜேஸ்வர் என்ற இடத்தில் விழுந்தது. மூடி

தெற்கில் 27 கி.மீ தொலைவில் குணேஸ்வர் என்ற இடத்தில் விழுந்து “வாமதேவ லிங்கம்” ஆகியது.

லிங்கத்தைச் சுற்றியிருந்த துணி தெற்கில் 32 கி.மீ தொலைவில் கடற்கரையில் உள்ள கண்டுக மலையில் விழுந்தது. அதுதான் முருடேஸ்வரில் அகோர உருவத்துடன் “முருடேஸ்வர்” என்றாகியது.

கட்டப்பட்ட கயிறு தெற்கில் தாரேஸ்வர் என்ற இடத்தில் விழுந்து “தத்புருஸ லிங்கம்” ஆகியது.

இவையெல்லாம் ஆத்ம லிங்கத்தின் பாகங்கள் என்றாகிறது. இவ்விவரங்களை வாயுவிடம் இருந்து அறியப்பட்டனவாம். வாயு இந்த ஐந்து இடங்களும் “பஞ்சக்ஷேத்திரங்கள்” என்று அழைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தானாம். இக்கதையைக் கூர்ந்து படிக்கும் போது, முதலில் இருந்த லிங்கம் உடைக்கப்பட்டது, அதன் பகுதிகள் தாம் குறிப்பிடப்பட்ட இடங்களில் லிங்கமாக வழிபட்டு வருகின்றன என்று சூசஜகமாக குறிப்பிட்டுள்ளது போலிருக்கிறது. ஏனெனில், பொதுவாக பின்னப்பட்ட அல்லது பெயத்தெடுக்கப் பட்ட லிங்கங்களை, அப்படியே விட்டு விடுவது வழக்கம். ஆனால், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, கோவில் கட்டி கும்பிடுகிறார்கள் என்றால், அத்தகைய விசித்திரமான விவரங்களை ஆராய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here