வள்ளலார் அருள் வாக்கு

231*இருத்தலின் அற்புதம்*!!!

வள்ளலார் அருள் வாக்கு;–
இந்த பௌதிக உடம்பில்,
*இருக்கின்ற நீ* யாரெனில், * நான் ஆன்மா* . ; சிற்றணு வடிவினன். இதன் இருப்பிடம், புருவமத்தியாகிய ஸ்லாட் ஸ்தானம். மேற்படி ஆன்மா கோடி சூரியப் பிரகாசம் உடையது–என்கின்றார்.
❤️ மேலும் திருவருட்பா விலே கடைசி பாடலில் , சத்திய அறிவிப்பில் ஒரு முக்கிய உண்மையை கூறுகின்றார்;—
“”என் சாமி, எனது துரை,என்னுயிர் நாயகனார் இன்று வந்து
*நான் இருக்கும் இடத்தில் வந்து அமர்கின்றார்*,
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேருடம்பில் கலந்து, உளத்தே பிரியாமல் இருப்பார் “”—– என்கின்றார்.
❤️ நாம் இருப்பதே அற்புதம்தான்! நாம் இருப்பதே அதிசயம்தான்!
*நான் இருக்கின்றேன்* என்ற அகவுணர்வு புனிதமானது; தெய்வீகமானது; மகத்துவமானது; நாம் இருப்பது செயற்கை அல்ல. *இல்லது வாரா; உள்ளது போகா* என்பர் ஞானிகள். இல்லாத ஒன்று புதிதாக வந்துவிடவில்லை.எனவே நாம் இவ் உலகில் புதிதாக வந்துவிடவில்லை; அப்படி வரவும் முடியாது.
திடீரென்று தோன்றியவர்கள் அல்ல நாம். அதுபோல, இவ்வுடல் அழிந்துவிட்டாலும், உயிர் பிரிந்து விட்டாலும் நாம் இல்லாமல் போக முடியாது. இதைத்தான், *உள்ளது போகா* என்பர் ஞானிகள்.
❤️ இருப்பது என்றும் இருந்துக் கொண்டுதான் இருக்கும்; நாம் எல்லோரும் என்றென்றும் இருப்பவர்களே! அனாதி காலமாக *நித்தியமாய்*
இருப்பவர்களே நாம். இனியும் அளவிறந்த கோடி காலமும் இருந்துக்கொண்டேதான் இருப்போம். *என்றும் இருப்பதுதான் நமக்கு இயற்கை*!!
❤️நான் இருக்கின்றேன் “” என்ற இருத்தலிலிருந்து, ஒருவரும் ஒருபோதும், விட்டு விலகவோ, ஒதுங்கவோ முடியவே முடியாது. தற்கொலை செய்துக் கொண்டால், “இல்லாமல் போகலாம்”, என ஒருவர் எண்ணினால், அது அறியாமை. இல்லாமல் போக முடியாது ஒருகாலும்! ஒருவர் இறந்துவிட்டால்,அவர் சமாதியில், அவர் எப்போது தோன்றினார்,எப்போது மறைந்தார் என்பதை,
“தோற்றம்–மறைவு’ என எழுதி, நாள்- மாதம்- வருடம் குறிக்கின்றனர். இது அக உண்மையை உணராமையே.அதே போல் ஒருவர் சொல்கின்றார்;–“நான் பிறந்து 50 வருடங்கள் ஆகின்றன”, என தனது பிறந்த தேதியை சொல்கின்றார்.அந்த பிறந்த தேதியைக் கூட உண்மையில் நாம் அறியோம்.நமது தாய், தந்தை சொல்லக் கேள்விப்பட்டதுதானே!
❤️உண்மையில், “”நான் இருக்கின்றேன்”” என்ற இருத்தல் உணர்வு , இவ்வுலகத்தே எப்பொழுதிருந்து இருக்கத் தொடங்கியது?என்னப்பார்த்தால் அதன் ஆரம்பத்தை அறியவே முடியாது!இதன் உண்மையை அறிய வேண்டுமானால், ஒருவன், தேக உணர்வைக் கடந்து, நினைப்பு மறப்பு அற்று, வேறு புற உலக சிந்தனை இல்லாது, மன ஓர்மையோடு, புருவமத்தியில் தனது கவனத்தைச் செலுத்தி, அகமுகமாக உள்நோக்கி, ஆழ்ந்து ஆராய்ந்துப் பார்த்தால், *நாம் நித்திய ஜீவனாக என்றென்றும் இருந்துவரும் நம் இயற்கை இருப்புண்மையை* உணரலாம்.இது உண்மை! சத்தியம்.முயற்சி செய்வோம்; அந்த முயற்சியும் இன்றே தொடங்குவோம்.அந்த விசார முயற்சியால் அனுபவமாகின்ற உண்மை என்னவெனில்,
நம் தலைநடுவே விளங்கும் ஓர் அணுத்துவமான புள்ளி நிலையிலிருந்து விரிகின்றன , அருவமான, *அனாதி நித்திய இருப்புணர்வு- அறிவு ஆகாச வெளியாக* உணரப்படும்.அந்த உள்ளுணர்வுக்கு எப்போதும் இருக்கின்ற தன்மையே உள்ளதாக உணரப்படும். அங்கு காலம் பொய்யாகி விடும்.அங்கு இறந்தகாலமோ, எதிர்காலமோ இல்லை.அங்கு அது, * நித்திய நிகழ்காலத்திலேயே* சதா *நான் இருக்கின்றேன்* என சுடர்விட்டுக் கொண்டிருப்பதை உணரலாம்.இது உண்மை!
❤️ அப்படி “நான் இருக்கின்றேன்” என விளங்குவது யார்? அப்படி விளங்குவது கடவுளே! அதை “நான் தான்” என நாம் உரிமை கொண்டாட முடியாது. இத்தனை காலமாக அதை தனது என எண்ணி வந்ததுதான் அஞ்ஞான மாகிய ,பாசாந்தகார ஆணவ இருள்.இந்த ஆணவ இருள் நீக்குவதற்காக, கோடிக் கணக்கான பிறவிகளில், அளவிறந்த காலமாக எல்லையில்லா சுக துக்கங்களை அனுபவித்து வந்துள்ளோம். இந்த தருணம் தான் அந்த அஞ்ஞான இருள் நீங்க இருக்கின்றது.
அந்த நான் என்ற அறிவுணர்வுக்குள்ளேதான் கடவுள், *உள்ளொளியாய்-அருள் ஒளியாய்* பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்.இந்த தருணம் அவர் வெளிப்பட்டு , நம்மையும்
*அருள் வண்ணமாக்கி* நித்திய, சத்திய, சுகபூரண பேரின்பப் பெருவாழ்வில் நிலவச் செய்ய உள்ளார்.அவர் திருவுள்ளம் அறிந்து அவரை அறிய, அவரை சார்ந்து கலந்து ஒன்றி வாழ நாமும் இடைவிடாது முயற்சி செய்வோமாக! அம்முயற்சியில் வெற்றிபெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருங்கருணை புரிவாயாக!!

❤️அன்பே அருட்பெருஞ்ஜோதி!
❤️தயவே தனிப்பெரும் கருணை!!
🙏உள்ளிருந்து உதவி;—–
திருவருட் பிரகாச வள்ளலார், தயாநிதி சுவாமி சரவணானந்தா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here